அரசியல்மலையகம்

நட்டத்தில் இயங்கும் பண்ணைகளை புனரமைப்பு செய்ய வேண்டும் -தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி.

                   
புதிதாக பாற்பண்ணைகளை அமைக்க சுமார் 1000 ஏக்கர் காணிகளை சுவீகரித்து தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏற்கனவே நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பாற்பண்ணைகளை புனரமைப்பு செய்து பால் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
  

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
 நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க பாற்பண்ணைகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய கண்டி மற்றும் வட்டவளை பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாற்பண்ணைகள் அமைப்பது வரவேற்கக் கூடிய திட்டம் என்றாலும் அதன் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
   

எனவே, தோட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். ஆயிரக் கணக்கான ஏக்கர் காணி சுவீகரிக்கப்படும் போது, தோட்டத் தொழிலாளர்கள் வேலை நாட்களை இழக்கக் கூடிய ஆபத்தும் காணப்படுகின்றது. இத்தத் திட்டத்தை  அரசாங்கத்தில் உள்ள மலையக இராஜாங்க அமைச்சரும், அரசுக்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தடுக்க வேண்டும்.

நாங்கள் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு குரல் கொடுக்கும் நேரத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் மௌனம் சாதிப்பதன் ஊடாக தமக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
   

பாராளுமன்றத் தேர்தலின் போது, தமக்கு ஐந்து வருடங்கள் அதிகாரத்தைக் கொடுத்தால் மலையகத்தை மாற்றிக் காட்டுவோம் என்று சவால் விடுத்ததை நம்பி மக்கள் வாக்களித்திருந்தார்கள்.

ஆனால், எதுவுமே நடக்கவில்லை. மாறாக மலையக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் கொண்டு வரும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற நன்றிக் கடன் இதுதானா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  

அத்தோடு, அரசாங்கம் புதிதாக பாற்பண்ணைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஏற்கனவே, நட்டத்தில் இயங்கி வருகின்ற பண்ணைகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். நாட்டில் 25 பாற்பண்ணைகள் உள்ளன. அவற்றில் சுமார் 200 ஏக்கர் காணியில் அமைந்துள்ள கொட்டகலை ரொசிட்டா பாற்பண்ணை உட்பட ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளில் அமைந்துள்ள பல பண்ணைகள் நட்டத்தில் இயங்கி வருகின்றன. அத்தகைய பண்ணைகளை இனங்கண்டு அவற்றை புனரமைத்து பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம்.

அதை விடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button