News

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சி-மயில்வாகனம் உதயகுமார்

நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு இன்றைய தினம் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் கூறுகையில்,

வரிச் சுமை வறிய மக்களின் தலையில்
ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இனியும் அவர்களால் சுமையை தாங்க முடியாது.

எனவே அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதுடன் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதி நிவாரணம் வழங்கும் திட்டத்தில் விசேடமாக பெருந்தோட்ட மலையக மக்கள் அதிகளவு உள்ளடக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நிவாரண நடவடிக்கைகளில் மலையக பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவது வழமையாகவே உள்ளது.

பெருந்தோட்டப்பகுதிகளில் வறுமை 50% மேல் காணப்படுகிறது என்பதனை இந்த உயரிய சபையின் கவனத்திற்கு
சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

ஆகவே, அரசாங்கம் உடனடியாக முன்வந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதுடன் இறக்குமதி தடைகளை நீக்கி முடியுமானவரை வறிய
மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

சபாநாயகர் அவர்களே

சர்வதேச நாடுகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களையும் இலங்கை தொடர்ச்சியாக மீறி வந்துள்ளது.

400 மில்லியன் டொலர் அமெரிக்க மிலேனியம் சிட்டி ஒப்பந்தம், இந்தியாவுடனான கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தம், ஜப்பானின் இலகு ரயில் திட்டம் என்பவற்றை ரத்து செய்தார்கள்.
சர்வதேச நாணய நிதியம் 16 தடவைகள் உதவிகளை வழங்கியுள்ளது.
9 தடவைகள் இலங்கை ஒப்பந்தத்தை இடைநடுவில் நிறுத்திக் கொண்டது.

பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த மீண்டும் கடனாளியாகி பயனில்லை. டொலர்களை சேகரிக்க மாற்றுத் திட்டம் அவசியம்.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு, தேயிலை இறப்பர் மற்றும் ஆடை துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு போன்றவை மிகவும் அவசியமாகும்.

இவற்றை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதுவே நிரந்தர தீர்வாக அமையும்.

அதற்கு மாறாக தற்காலிக தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்று அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து வரிகளை அதிகரித்து அரச சொத்துக்களை தனியாருக்கு விற்று மக்களுக்கு சுமைக்கு மேல் சுமை அதிகரித்து இந்த அரசாங்கம் பயணிக்க முயற்சிக்கிறது.

இதனூடாக இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top